Feminist Collective for Economic Justice
ආර්ථික යුක්තිය සඳහා ස්ත්රීවාදී එකමුතුව
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம்
பிற்போக்கான பொருளாதாரக் கொள் கைகளுக்கு மத்தியில் NPP இன் அடக்குமுறைச் சட்டங்களை பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம் கண்டிக்கிறது
23.02.2026
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் (FCEJ), அடக்குமுறைச் சட்டங்களை, குறிப்பாக 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சட்டமூலங்களான பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கான சட்டமூலம் ஆகியவற்றைக் கண்டிக்கிறது. குற்றம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றைக் கையாள்வது ஒரு அரசாங்கத்தின் நியாயமான, சட்டபூர்வ பணியாக அமைகின்ற போதிலும், வறுமையை முன்னெப்போதும் இல்லாத வகையில் குற்றமாக்குவதும், காவல்துறையின் அதிகாரத்தை பரந்தளவில் விரிவுபடுத்துவதும், மக்கள் நீதியை நாடுவதற்கான உரிமையை அபகரிப்பதுவும் மிகவும் கவலையளிக்கும் விடயங்களாக அமைகின்றன.
இத்தகைய பின்னணியை உற்றுநோக்கும் வேளையில், இந்தச் சட்டரீதியான மாற்றங்களின் நோக்கம் எவர்களுடைய நலன்களைச் சார்ந்து அமைந்திருக்கின்றது என்பது வெளிப்படும் என நாம் நம்புகிறோம். சர்வாதிகார வலதுசாரி அச்சமூட்டல்களால் தூண்டப்படும் வனமுறை பயங்கரவாத வடிவம் எடுத்தல், புலம்பெயர்ந்தோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் ஆகியோரைக் குற்றவாளியாக்குதல் மற்றும் உலகின் தென் பிராந்திய நாடுகளை ஊழல் நிறைந்தவையாகவும் ஒழுக்கமற்றவையாகவும் பார்க்கும் கண்னோட்டம் ஆகியவை செல்வத்தையும், செல்வம் ஈட்டுவதையும் பாதுகாக்கும் ஒரு உலகளாவிய போக்காகும். செல்வந்தர்களுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக சாதாரண மக்களின் வாழ்வில் உழைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மீதான சுரண்டலின் விளைவாக உருவாகும் நியாயமான எதிர்ப்பு, அதிருப்தி, விரக்தி மற்றும் வன்முறையை எதிர்கொள்ள அரசின் காவல்துறை அதிகாரங்கள் வலுவூட்டப்படுதல் அவசியமாகக் கருதப்பட்டுள்ளன. வேகமாக விரிவடைந்து வரும் ஏற்றுமதித் துறை, கனிமச் சுரங்கம், அதிக நிலம் தேவைப்படும் விவசாயத் துறை மாற்றம், தனியார் நிதிமயமாக்கல் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகளின் தனியார்மயமாக்கல் ஆகியவற்றினால் பெருநிறுவனங்களின் பேராசைகள் பொருளாதாரக் கொள்கைகளாக வடிவமைக்கப்படுகின்றன என்பது தெளிவாகின்றது.
நாட்டிலுள்ள ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வில் தீவிரமடைந்து வரும் நெருக்கடி நிலைமை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தொடர்ச்சியான குறைந்தளவிலான ஊதியம், அதிகரித்து வரும் ஊதியத் திருட்டு மற்றும் உயர்ந்த வாழ்க்கைச் செலவு ஆகிய காரணிகளின் நிமித்தம் குடும்பங்களில் பொருளாதாரப் பாதுகாப்பின்மை நிலவுகிறது. இது குடும்பக் கடன் விரிவாக்கத்திற்கும், சூறையாடும் நிதி நிறுவனங்களால் உழைக்கும் ஏழைகள் சுரண்டப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது. நிலையற்ற முறைசாராத் தொழிலாளர் முறை விரிவடைந்து, பணியிடங்களில் துன்புறுத்தலையும் சுரண்டலையும் அதிகரித்துள்ளது. நீர் வசதி, விவசாயம் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள், தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள பணிசார் நிலைமைகள் ஆகியவற்றில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த அழுத்தங்கள் மேலும் தீவிரமடைகின்ற நிலை காணப்படுகின்றது. இதனால், தொடர்ச்சியான காலநிலை நெருக்கடிகளிலிருந்து மீண்டுவரும் குடும்பங்களின் மீதான பொருளாதாரச் சுமைகள் அதிகரிக்கின்றன. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லல், தொழிலைத் தக்கவைத்துக் கொள்ளல், குடும்பத்திற்கு உணவளிக்கும் பல வருமான வழிகளைக் கண்டறிதல் ஆகியவற்றிற்கு பரவலான நம்பிக்கையற்ற தன்மையே நிலவுகின்ற அதேவேளை அதன் விளைவாக தொழில் நிமித்தம் வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகள்
NPP அரசாங்கமானது, சாதாரண மக்களின் அதிகரித்துவரும் விரக்தியின் பின்னணியிலேயே அத்தியாவசிய சேவைகளைத் தனியார்மயமாக்கும் பொருளாதாரக் கொள்கைகளை விரைவுபடுத்துவதற்கும், தனது அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான விதத்தில் செயற்படும் நிபந்தனைகளுடன்கூடிய வெளிநாட்டுக் கடன்களைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டுவருகிறது. NPP ஆனது மானியங்களை நீக்குதல், குறைந்த பொதுச் செலவினம் மற்றும் சமூகப் பாதுகாப்பைக் குறைத்தல் போன்ற சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் போதுமான பாதுகாப்புகள் நிலைநிறுத்தப்படுகின்றதா என்பதனைக் கருத்திற் கொள்ளாமை, சுரங்க அகழ்வு, சூரியப் பண்ணைகள், காற்றாலை மின்சாரம், செம்பனை எண்ணைய் தோட்டங்கள் மற்றும் விசேட பொருளாதார மண்டலங்கள் போன்ற பாரிய அளவிலான திட்டங்களை அவசரமாகச் செயற்படுத்தும் விடயத்தில் காணப்படுகின்றது. இச்செயல்பாடுகளுக்கு அரசாங்கம் தனியார் வெளிநாட்டு முதலீட்டையும் நாடுகின்றது. அரசின் மீதான பெருநிறுவனங்களின் கையகப்படுத்தும் ஆதிக்கமனாது மக்களின் செலவில் செல்வத்தைத் தேடுகின்றதும், அனைத்தையும் தரைமட்டமாக்குகின்றதுமான ஒரு உயர் மட்டத்தினரின் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு வலு சேர்ப்பதாகவே அமைகின்றது. அரசு, பொருளாதார நிலைத்தன்மையை நிலைநாட்டுதல் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரிலேயே இதனை மேற்கொள்கின்றது. இது, மக்களின் துன்பத்தையும் நம்பிக்கையிழந்த தன்மையையும் நன்கு அறிந்த சக்திகளால் இயக்கப்படும் ஒரு பொருளாதாரப் போக்காக அமைகின்றது. இவ்வநீதிகள் பொதுமக்களின் போராட்டத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்துபவையாக அமைகின்றது. இவ்வாறாக, 'எதிரி' அரசினாலேயே உருவாக்கப்பட்டு, அதே அரசினால் எதிர்க்கப்படும் நிலை காணப்படுகின்றது. தமது கடினமான நிலைமைகளைப் பற்றிய முறைப்பாடுகளை முன்வைத்து, அரசு பதவி விலக வேண்டும் எனக் கோரும் எதிர்ப்பாளரான பிரசைகள், உற்பத்தியைக் குறைக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளி, மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பாரிய அளவிலான திட்டங்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் சார்ந்த ஆர்வலர்கள் ஆகியோரே 'எதிரி' என்ற வகிபங்கினுள் சித்தரிக்கப்படுகிறார்கள். மக்கள் விரோதப் பொருளாதாரத்தை அமுல்படுத்தும் செயல்பாடுகள் எப்போதுமே அடக்குமுறைச் சட்டங்களுடன் இணைந்ததாகவே காணப்பட்டு வந்துள்ளன. (here)
மக்கள் விரோதச் சட்டங்கள்
NPP அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் அடக்குமுறைச் சட்டங்களின் எண்ணிக்கையில் ஒரு விரைவான அதிகரிப்பை நாம் காண்கிறோம். 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) அரசாங்கம் முன்வைத்ததைக் கண்டோம். இந்த சட்டமூலமானது 'பயங்கரவாதம்' என்பதற்கு ஒரு பரந்த வரையறையை முன்மொழிகிறது. இது அனைத்து வகையான அரசியல் எதிர்ப்புகள், பேரணிக் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் 'ஒரு அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச அமைப்பையோ ஏதேனும் ஒரு செயலைச் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்தும்' செயல்களைப் பயங்கரவாதமாகக் கருதுகிறது. இந்த சட்டமூலமானது காவல்துறை, இராணுவம்; மற்றும் கடலோரக் காவல்படைக்கு பரந்த அதிகாரங்களையும், அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பாக நாட்டின் சனாதிபதிக்கு முன்னெப்போதும் இல்லாத அதிகாரத்தையும், பொது மன்னிப்பு அல்லது இழப்பீடுகளுக்கு ஈடாக வழக்குகள் ஒத்திவைக்கப்படும் சமரசங்கள் தொடர்பாக சட்டமா அதிபருக்கு முன்னெப்போதும் இல்லாத அதிகாரத்தையும் முன்மொழிகின்றது. அதேவேளை கைது நடவடிக்கைகள் மற்றும் தடுப்புக்காவல் மீதான நீதித்துறை மேற்பார்வையையும் இது கட்டுப்படுத்துகின்றது. இத்தகைய சட்டங்கள் யாருக்கெதிராக தன்னிச்சையாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ பயன்படுத்தப்படுகின்றதோ அவர்களுக்கு அர்த்தமுள்ள பாதுகாப்புகளும் நீதி கிடைப்பதற்கான வழிகளும் PSTA சட்டத்தில் காணப்படவில்லை.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலமானது PSTA சட்டத்தில் காணப்படுவதைப் போன்ற அதிகாரங்களை அறிமுகப்படுத்துவதோடு, அதற்கு மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்தவும் அனுமதிக்கின்றதாக அமைகின்றது. இந்த ஒப்புதல் வாக்குமூலப் பிரிவானது, சித்திரவதைக்கு வழிவகுத்த PTA சட்டத்தில் உள்ள அதே பிரிவை நினைப்பூட்டுகிறது. இங்கு கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, அவர்களை இழிவான, கொடூரமான மற்றும் தரக்குறைவான முறையில் நடத்துவதுவதும் பின்னர் அந்த வாக்குமூலங்களையே குற்றவாளியாக்கித் தண்டிப்பதற்கான ஒரே ஆதாரமாகப் பயன்படுத்துவதுமான நடைமுறையே காணப்பட்டது. இதேபோல், வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளிகளைத் தடுக்கும் சட்டமூலமானது, மீண்டும் ஒருமுறை மிகவும் பரந்த அளவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றங்களில் பங்கேற்கும் பிரசைகள் மற்றும் பிரசைகள் அல்லாதவர்களுக்கும் பொருந்துவதாக அமையும் அதேவேளை இது "பயங்கரவாதம்" என்ற அடிப்படைக் குற்றத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கக்கூடிய செயல்களையும் உள்ளடக்கியுதாக அமைந்துள்ளது.
முன்மொழியப்பட்ட அரச சார்பற்ற நிறுவன சட்டமூலமானது, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையானோர் இணைந்து செயற்படும் குழுக்கள் உட்பட அனைத்து தன்னார்வ சமூக செயற்பாடுகளுக்கும் கட்டாயமான பதிவு செய்தல், ஏதேனும் கூட்டு நிதித் திரட்டலை மேற்கொள்வதாயின் அதனை அறிவித்தல் ஆகியவற்றை வலியுறுத்துகின்ற அதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கக் கொள்கையுடன் ஒத்துப்போகும் விதத்திலான ஒரு தீர்வையை விதிப்பதுடன் தகவல் வழங்கத் தவறுதல் போன்ற நிர்வாக முறைகேட்டுச் செயற்பாடுகளுக்கு மற்றும் குறைபாடுகளுக்கு அதிகபட்சமாக பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றது என்பதுடன், ஒட்டுமொத்தமாக ஒன்றுகூடலிற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டில் மட்டும் இந்த அரசாங்கமானது தனியுரிமையில் சட்டப்பூர்வமான அத்துமீறலையும் அரசின் கண்காணிப்பையும் உருவாக்கும் விதத்திலான பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டம், பணமோசடி தடுப்பு (திருத்தச்) சட்டம் மற்றும் நிதிப் பரிவர்த்தனை அறிக்கை அளித்தல் (திருத்தச்) சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியது. 2026 ஆம் ஆண்டின் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமும் சமூக சேமிப்புகளைச் சிதைக்கின்ற ஒன்றாக அமையும் அதேவேளை மிகக் குறிப்பிடத்தக்க விதத்திலான சமூகப் பொருளாதார பலாபலன்களைக் கொண்டுள்ள கடன் சுமை சார்ந்த சுரண்டலுக்கு எதிராக அர்த்தமுள்ள பாதுகாப்புகளை ஏற்படுத்தத் தவறுகின்றது. இந்தச் சட்டங்கள், இணையப் பாதுகாப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கைச் (ICCPR) சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் போன்ற ஏற்கனவே நடைமுறையில் உள்ள அடக்குமுறைச் சட்டங்களின் மீதும், ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் போராடும் பொதுமக்களுக்கு எதிராகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணற்ற காலனித்துவ தண்டனைச் சட்டங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுகின்ற புதிய சட்ட ரீதியான அடுக்குமுறைகளாக அமையும். அதிகாரக் குவிப்பு, மக்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிரசைகளின் செயற்பாடுகளைத் தண்டிப்பதற்கான அதிகாரிகளின் அதிகாரத்தை விரிவுபடுத்துதல் ஆகிய விடயங்களே இந்தச் சட்டங்கள் அனைத்தினதும் திட்டமும் தொனியுமாகக் காணப்படுகின்றது.
மக்களுக்குச் செவிசாய்த்து உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுங்கள்
கட்டமைப்பு மாற்றத்தினை நோக்காகக் கொண்டு மகத்தான மக்கள் ஆணையைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) அரசானது, ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளிலும், விக்கிரமசிங்கவின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் காணப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களும், சுமையான பொருளாதாரக் கொள்கைகளும் தொடரும் நிலையையே நாம் கண்கூடாகக் காண்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, சாதாரண பொதுமக்களின், குறிப்பாகச் சுமையைத் தாங்கும் உழைக்கும் பெண்களின், அதிகரித்த நிலையற்ற வாழ்க்கைத் தன்மையைக் கிரயமாகக் கொண்டு, பேரியல் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மக்களுக்குத் தொடர்ந்து தோல்வியையே விளைவிக்கும் பொருளாதாரக் கொள்கைகளுடன் இணைந்த இந்த அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்தையும் குவிக்கும் செயற்பாடு தற்செயலான ஒன்றல்ல. போதுமான விளக்கமோ நியாயப்படுத்தலோ இன்றியும், பொதுமக்களின் கருத்தையோ பின்னூட்டத்தையோ உண்மையான விதத்தில் கருத்திற்கொள்ளாமலும் இருக்கும் மாறிவரும் சட்டச் சூழலைக் காணும் நிலை திகிலூட்டுவதாக அமைகின்றது.
1970 களின் பிற்பகுதியில், ஜே. ஆர். ஜயவர்தனவின் தலைமையின் கீழும், பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கும் தீவிர முயற்சியின் கீழும் இதே போன்ற தீவிரத்துடன் அடக்குமுறைச் சட்டங்களின் (பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்) ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நாம் இங்கு நினைவுகூருகின்றோம்.
NPP அரசாங்கத்தின் மக்கள் விரோதத் திட்டத்தை நாங்கள் வெளிக்கொணரும்படி குரல் எழுப்புகின்றோம். சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் மாற்றுவதற்கான ஆணையுடனே நீங்கள் வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். நீங்கள் இலங்கையின் சாதாரண மக்களின் குரலைக் கேட்கத் தவறுகிறீர்கள்;, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மிகவும் நலிவடைந்தவர்கள் மீது ஏற்படுத்தும் மீளமுடியாத தாக்கத்தைக் காணத் தவறுகிறீர்கள்;, உங்களை ஆதரிப்பவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வாக்குறுதியளித்துக்கொண்டே, அவர்களின் நலனுக்கு எதிராகச் செயற்படும் ஒடுக்குமுறை நிறுவனங்களை உருவாக்குகிறீர்கள். உங்கள் நடவடிக்கைகள் பேரியல் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் உயர்மட்டத்தினரின் நலன்களுக்குச் சேவை செய்கின்றனவாகக் காணப்படுகின்றன. உங்கள் போக்கை மாற்றிக்கொள்ளுங்கள், ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது.
முற்றும்.
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் என்பது நாட்டின் பல்பாகங்களிலிருந்தும் பெண்ணிலைவாத பொருளியலாளர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய இலங்கையின் தற்போதைய பொருளதார நெருக்கடியுடன் அவர்கள் பணியாற்றும் சமுதாயங்களின் வாழ்க்கை யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைப் பரிந்துரைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றுக்குக் குரல் கொடுப்பதற்கும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டாகும். உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவு feministcollectiveforjustice@gmail.com
.png)