Feminist Collective for Economic Justice
ආර්ථික යුක්තිය සඳහා ස්ත්රීවාදී එකමුතුව
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம்
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமமான (Feminist Collective for Economic Justice) நாங்கள், இலங்கையில் திருநர் சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளை தடுக்கும் முயற்சிகள் மீண்டும் உருவாகி வரும் வேளையில், எங்கள் உறுதியான ஆதரவினை இச்சமூகத்தினருக்கு வழங்குகிறோம்.
29.04.2026
இலங்கையில் சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு திருநர் சமூகத்தவர்களுக்கு பாலின அங்கீகார சான்றிதழ்களை வழங்கும் வகையில் பொது சுற்றறிக்கை, இல. 01-34/2016 இனை 2016ம் ஆண்டில் வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையை, சுகாதார அமைச்சு வெளியிடச் செய்ததன் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழு ஒரு வரலாற்று வெற்றியைக் கண்டது. மேலும், பல்வேறு கட்டமைப்புகளால் நீண்டகாலம் கைவிடப்பட்டிருந்த திருநர் சமூகத்தினருக்கு இந்த சுற்றறிக்கையை நடைமுறையில் அமல்படுத்துவதை உறுதிப்படுத்த மனித உரிமை ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. சமூகத்தால் கைவிடப்பட்ட இக்குழு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் பாலின அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு முக்கிய சட்ட பூர்வமான உரிமையினை பெற்றனர். பாலின அங்கீகாரம் அடிப்படை மனித உரிமை என மருத்துவ, உளவியல் நிபுணர்கள், மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் உறுதிபடுத்தியுள்ளச் சூழலில், இவ்வுரிமையானது குறைந்தபட்ச ஒன்றாகவே அமைகின்றது. இந்த குறந்தபட்ச உரிமையானது தற்போது உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. இச்சுற்றறிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது. அதோடு இந்த வழக்கு 20 ஜூலை 2026 அன்று விசாரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு, பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்த சமூகத்தினருக்கு இத்தகைய சவால்கள், உடல் மற்றும் மன அழுத்தத்தினை ஏற்படுத்தும். மேலும் முன்னரே வழங்கப்பட்ட உரிமைகளை மீளப் பறித்தல் என்பது எந்த நாட்டுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையாது.
கடந்த சில ஆண்டுகளாக ஈஸ்டர் தாக்குதல், கோவிட்-19 தொற்று நோய் (Covid-19) , பொருளாதார நெருக்கடி மற்றும் சமீபத்திய இயற்கை பேரழிவான கடுமையான சூறாவளி, வெள்ளம் போன்ற நிகழ்வுகள் சமூகத்தின் பல ஓரங்கட்டப்பட்டவர்களை பாரிய அளவில் பாதித்துள்ளன. இதனுள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த திருநர் சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக, குடும்ப, பண்பாட்டு, பொருளாதார மற்றும் சட்ட ரீதியான ஆதரவு இல்லாமையால் திருநர் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்களைப் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வாழ்கின்றனர். இந்த கைவிடப்பட்ட சூழ்நிலையில் பலர் பாதுகாப்பு இல்லாத முறைசாரா தொழில்களில் தினக்கூலிகளாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பொருளாதார கட்டுப்பாடுகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் வறுமையை குறைக்காத கொள்கைகள் திருநர்களை கடன் சுமைக்குள்ளாக்கி நம்பிக்கையற்ற வாழ்க்கைக்குள் தள்ளுகின்றன. வறுமையை எதிர்கொள்ளும் அதேநேரத்தில் சமூகக் கலங்கம் உருவாக்கும் வலிகளை எதிர்கொள்வது பெரும் வேதனையான அனுபவமாக உள்ளது.
பாலின அடையாளம் என்பது மனித மாண்பின் அடிப்படைக் கூறாகும். வறுமையில் வாழும் உழைக்கும் வர்க்கத் திருநர்கள் சமூக பாரபட்சத்தின் காரணமாக மாண்புடன் வாழ முடியாத நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்தப் பாரபட்சம் ஒழுக்க நெறி என்ற பெயரில் முன்வைக்கப்படும் கருத்துக்களாலும், மனித நேயம் இல்லாமையாலும், மேலாதிக்க மனப்பான்மையாலும், சமூகத்தில் “வேறுபட்டவர்” எனக் கருதப்படுபவர்களிடம் உள்ள அச்சத்தாலும் உருவாக்கப்படுகின்றன. இதனையொட்டி, அரசானது அடையாளத்தின் அடிப்படையில் உருவாகும் பாகுபாடுகளுக்கு இணங்கவோ அவற்றை ஊக்குவிக்கவோ கூடாது. அதுமட்டுமில்லாமல், அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளபடி மக்கள் எந்த அடையாளத்தவர்களாக இருந்தாலும், பாரபட்சம் தவிர்த்து சட்டத்தின் முன் அனைவரும் சமமாக கருதப்பட்டு சமமான பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும். எனவே, அனைத்து மக்களுக்கும் மாண்பு மற்றும் அமைதியான வாழ்வை அமைக்க உதவும் முக்கியமான அரசாங்க நடவடிக்கைகளான பாலின அடையாள சான்றிதழ்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் என்பது நாட்டின் பல்பாகங்களிலிருந்தும் பெண்ணிலைவாத பொருளியலாளர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய இலங்கையின் தற்போதைய பொருளதார நெருக்கடியுடன் அவர்கள் பணியாற்றும் சமுதாயங்களின் வாழ்க்கை யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைப் பரிந்துரைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றுக்குக் குரல் கொடுப்பதற்கும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டாகும். உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவு feministcollectiveforjustice@gmail.com
.png)