Feminist Collective for Economic Justice
ආර්ථික යුක්තිය සඳහා ස්ත්රීවාදී එකමුතුව
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம்
நுண்நிதி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொருளாதார நீதிக்கான பெண்ணியக் குழுமத்தின் (FCEJ) அழைப்பு
17th October 2025
தேசிய மக்கள் சக்தி கட்சியானது (NPP) தனது ஆட்சியின் முதல் ஆண்டினை அண்மையில் நிறைவு செய்தது. இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்த புதிய அரசாங்கமானது களத்தில் உள்ள யதார்த்த நிலைகளுடனான தொடர்பினை ஏற்கனவே இழந்துவிட்டது என்பதாகும். கூட்டணி அரசாங்கத்தின் பிரதான கட்சியான JVP இன் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள், “இலங்கையில் யாரும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என சமீபத்தில் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆளும் கட்சியின் கூற்றுக்களுக்கு முரணான விதத்தில், அடிமட்ட பெண்கள் குழுக்களுடன் பணியாற்றும் எமது அனுபவங்கள், NPP அரசு தாம் தொடர்ந்து செல்ல தேர்ந்தெடுத்துள்ள கடுமையான சிக்கனக் கொள்கைகளினால் மக்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமான சீரழிவிற்கு முகங்கொடுத்துள்ளமையை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னைய ஆட்சியாளர்களால்; கொண்டுவரப்பட்ட பல சட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்ந்தும் மக்களை வறுமையில் சிக்க வைக்கின்ற அதேவேளை, அதே சட்டங்கள் மற்றும் கொள்கைகள் தற்போதைய அரசாங்கத்தால் வெறுமனே ஓரளவு சுருக்கப்பட்டு மீண்டும் முன்மொழியப்படுகின்ற விடயத்தைக் குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பொதுமக்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு மக்கள் முன் இன்னமுமே முன்வைக்கப்படாத புதிய நுண்நிதி சட்டமூலமானது தூக்குக்கயிற்றில் புதிதாக இடப்பட்ட முடிச்சாக மாறுமா?
குடும்பங்களில் பெருகிவரும் கடன்படுநிலைமை
பொருளாதார நீதிக்கான பெண்ணியக் குழுமமானது (FCEJ) குடும்பங்களில் கடன் பொறியில் ஆழமாக வீழ்ந்துவரும் பலரது நாளாந்த யதார்த்தங்களை அறிந்து, அவற்றை ஆவணப்படுத்திவருகின்றது. இந்நிலைமை குடும்பங்களை உணவுப் பாதுகாப்பின்மைக்கும் நிதிசார் அழிவிற்கும் இட்டுச்செல்கிறது. பொருளாதார நெருக்கடியான சூழலில், போதுமான வருமானமின்மை, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு மற்றும் உள்ளுர் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரச முதலீடுகளின் குறைப்பு ஆகியவற்றால், குடும்பங்கள் நுண்நிதி நிறுவனங்கள் அல்லது முறைசாரா கடன் வழங்குநர்களை நாடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
வடமாகாணத்தில், போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் குடும்பங்கள் நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த கடன்களை வழங்கும் நுண்நிதி நிறுவனங்களை நாடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்களின் நேரம், உழைப்பு மற்றும் வருமானம் ஆகியவை கடன்களைப் பெறுவதற்கும், அவற்றைத் திருப்பிச் செலுத்துவதற்குமே செல்கின்றன. பல பெண்கள் தாம் மிகவும் சிரமப்பட்டுச் சேர்த்த தமது சிறு சேமிப்புகளையும் சொத்துக்களையும் இழந்து, அடிப்படை உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முயற்சிக்கின்றனர். பெண்கள் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதியைப் பெறுவதற்காகவே பல கிராம மட்டத்திலான சேமிப்பு மற்றும் கடன் குழுக்களில் உறுப்பினர்களாகின்றனர். கடன்களுக்கான பிணையாக சிறு சேமிப்பை உருவாக்குவதற்காக அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பண முதலைகளிடமிருந்து அதிக பணத்தை கடனாகப் பெற்றுக் கொள்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில், குடும்பங்கள் நாட்கூலி வேலையின் மூலமான சொற்ப வருமானத்தின் மூலம் உயிர்வாழ முயற்சிக்கின்றன. போதியளவு வேலையைக் கண்டுபிடிப்பதற்கும் அல்லது வீட்டிலிருந்தான நிச்சயமற்ற, முறைசாரா உற்பத்தியில் இருந்து வருமானம் ஈட்டுவதற்கு பலர் போராடுகின்றார்கள். இது குடும்பங்களை அடிப்படை உணவு, சுகாதாரம் மற்றும் ஏனைய அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கடன்களை பெற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து அளவுக்கு மீறிய வட்டி வீதத்தில், பெரும்பாலும் 40% க்கும் அதிகமான வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். பெண்கள் தமது உடைமைகளான நகைகள், வாகனங்கள், வீடுகள் மற்றும் காணி போன்றவற்றை இழந்துள்ளனர். பலர் தங்கள் காணி உறுதிகளை பிணையாக வைத்து கடன் பெற்றுள்ளனர். கடன் சுமையின் விளைவாக வீட்டு வன்முறை, சுகாதார பிரச்சினைகள் என்பன அதிகரித்துள்ளதுடன் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளும் பட்டினியில் வைத்து கடன் தவணைகளை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். மட்டக்களப்பில் தாழங்குடா என்ற சிறிய கிராமத்தில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வீட்டிலேயே புறக்கணிப்பு ஆகியவற்றை வெளிப்படையாகவே வீடுகளில் காணக்கூடியதாக இருந்தது. ஒரு பெண் தான் வாழ்வதற்கு ஒரு சிறிய வீட்டை கட்டுவதற்காக பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்தமுடியாமல் இளம் பிள்ளைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளார். மாற்றுத்திறனுடைய குழந்தையைக் கொண்ட மற்றொரு பெண், கடன் அறவிடுபவர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்வதற்கு முயன்றுள்ளார். மேற்படி கடன் அறவிடுபவர்கள் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்து பணத்தை வசூலிக்கும் வரை அங்கிருந்து வெளியேற மறுப்பதுடன், அடிக்கடி வாய்மொழியான துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு, சில சமயங்களில் உடல்ரீதியான மிரட்டல்களையும் விடுத்துள்ளனர். கடந்த வாரத்தில்கூட, ஒரு கடன் வழங்குபவர், அந்தப் பெண் கடன் தவணையை செலுத்தும் வரை அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டையை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுவிட்டதன் காரணமாக அந்தப் பெண் தனது சொந்த வங்கிக் கணக்கைக்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில், குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புறப் பிரதேசங்களில் வாழும் பெண்கள் தமது உணவுத் தேவைக்காகவும், பிள்ளைகளின் அடிப்படை கல்விச் செலவுகளை ஈடுசெய்துகொள்வதற்காகவும், மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான பயன்பாட்டு கட்டணங்களை செலுத்துவதற்காகவும் மற்றும் தங்கள் வீடுகளுக்கான அடமானங்களைச் செலுத்துவதற்காகவும் கடனகளைப் பெறுகின்றனர். அவர்களின் உயிர்வாழ்தலிற்கும் வீடற்ற நிலைமை ஏற்படக்கூடிய தன்மைக்குமான அச்சுறுத்தல் எப்போதும் காணப்படுகின்றது. கவலைக்கிடமான விடயம் என்னவெனில், ஒன்றன்பின் ஒன்றாக கடனுக்குமேல் கடன் பெறும் நடைமுறை மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றமையாகும். இத்தகைய பரிதாபகரமான பெண்களின் நிலைமையை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, குறுஞ்செய்திகள் வாயிலாகவும், கையடக்கத் தொலைபேசி செயலிகள் மூலமாகவும் தினசரி கடன்கள் வழங்கப்படுகின்றன. கடனை மீள அறவிடும் நடைமுறைகளின்போது கடன் பெற்றுக்கொண்டவர்களின் கையடக்கத் தொலைபேசியின் உள்ளடக்கத்தை பயன்படுத்துவதற்கான வசதியை பெற்றுக்கொள்வது போன்ற புதிய வடிவிலான பகிரங்க அவமானத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் வற்புறுத்தல்கள் போன்ற புதிய உபாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கடன் பொறி
மேற்குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் எடுத்துக் காட்டுவது போன்று, ஏழைத் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள், அதிலும் கிராமப்புற விவசாயம் மற்றும் மீன்பிடி சமூகங்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புற தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அனைவருமே கடன் பொறி முறைமைக்குள் அகப்படுத்தப்பட்டுள்ளனர். குடும்ப மட்டத்தில் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமான நிலையை அடைவதன் காரணமாக, குடும்பங்கள் நிதிரீதியாக நலிடைந்து வருகின்றன. குறைந்த ஊதியங்கள், நாட்டின் சிக்கன நடவடிக்கைகளால் ஏற்படும் அதிக வாழ்க்கைச் செலவுகள் என்பவற்றுடன் போதியளவிலான அரசின் ஆதரவின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக அரசிடமிருந்து போதிய பாதுகாப்பு இல்லாத நிலைமை ஆகியவை வளர்ந்து வருகின்ற மற்றும் சுரண்டலை மேற்கொள்ளும் நுண்நிதி கடன் துறைக்கு மிக சாதகமான நிலைமைகளை உருவாக்கியுள்ளன.
தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட வேண்டும் என்கின்ற ஏக்கத்தில், பெண்கள் அயல் வீட்டாரின் உதவியை நாடுகின்றனர், அதன் பின்னர் அதிக வட்டிக்கு கடன் வழங்கும் உள்ளுர் நபர்களை நாடுகின்றனர். அத்துடன் நிகழ்நிலை வழிக் கடன்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி அடிப்படையிலான கடன்கள் உள்ளிட்ட நுண்நிதி நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் அரச சமுர்த்தி திட்டம் ஆகியவற்றை நாடுகின்றனர். இத்தகைய பின்னணியில், சுய உதவிக்குழுக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் மாற்றுக் கடன் வசதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு பெறப்படும் கடன்கள் பெரும்பாலும் ஏனைய அதிக வட்டியுடனான சுரண்டலைக் கொண்ட கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக அவற்றின் மூலம் உரிய பயனைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.
மிகவும் அதிகமான நாளாந்த மற்றும் வாராந்த வட்டியை அறவிடும் திட்டங்களின் ஊடாக கடன் பெறுவதற்கு பிணை முறை அவசியமற்றதாகக் காணப்படுகின்ற போதிலும், அச்சுறுத்தல், உடல் ரீதியான மற்றும் வாய்மொழி துஸ்பிரயோகம், குடும்ப உறுப்பினர்களை மிரட்டுதல், வங்கி அட்டைகள், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், சொத்துக்கள் ஆகியவற்றை பிணைப் பொருட்களாக வைத்திருத்தல் மற்றும் கடன் பெற்றவர்களை அவமானப்படுத்தும் விதத்திலான அச்சுறுத்தலை மேற்கொள்ளும் நோக்கில் தொலைபேசி தொடர்புகளை மேற்கொள்ளுதல் ஆகிய விடயங்கள் பயன்படுத்தி கடன்களை மீளப்பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. சில நிறுவனங்கள் கடன் பெற்றவரின் தொலைபேசியில் உள்ள தொடர்பு இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, கடன் பெற்றவர் குறிப்பிட்ட நபரை உத்தரவாதம் அளிப்பவராகக் குறிப்பிட்டுள்ளார் எனக்கூறி, கடனை உடன் திருப்பிச்செலுத்தும்படி கூறியுள்ளன. கடன்களை மீள அறவீடு செய்வதில் முழு அளவிலான தனிப்பட்ட, குடும்ப ரீதியான மற்றும் சமூக ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
சில நிறுவனங்கள் பெண்களது வீடுகளை கடன் அறவீடு செய்யும் நிலையங்களாகப் பயன்படுத்துகின்றன. கடன் அறவிடும் பொறுப்பில் இருக்கும் பெண், ஒரு சிறிய முகவர் சேவைக் கட்டணத்தைப் பெற்றுக்கொள்கின்ற போதிலும், அவர் பெரும்பாலும் கடனில் மூழ்கியுள்ள நிலைமை காணப்படுகின்றது. பெண்கள் குழுக்களாக உருவாக்கப்பட்டு, குழுவின் உறுப்பினர்கள் கடனை மீளச் செலுத்தாமைக்கு பொறுப்பேற்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இத்தகைய நடைமுறைகள் சமூகங்களுக்குள் ஆழமான பிளவுகளையும் மோதல்களையும் விதைத்துள்ளன. இத்தகைய செயற்பாடுகள் பல குடும்பங்களை மேலும் நிச்சயமற்றனவாகவும், வறுமையானவையாகவும் மாற்றுகின்ற அதே வேளையில், நுண் கடன் தொழிற்துறை முதலாளிகள் இதனூடாக வளமிக்கவர்களாகினற்னர்.
பல தசாப்த கால போராட்டங்களும், அரசின் பதிலளிக்கத் தவறிய நிலையும்
கடந்த பல தசாப்த காலங்களாக சூறையாடும் விதத்திலான கடன்களை எதிர்த்துப் பெண்கள் போராடியுள்ளனர். மட்டக்களப்பில், போரினால் பாதிக்கப்பட்ட கிராமப்புற, கிராமங்களுக்குள் நுண் நிதி நிறுவனங்கள் அணுகும் செயற்பாட்டை சீரமைக்கும் செயற்பாட்டில் தலையிடுமாறு பெண்கள் குழுக்கள் அரசாங்க அதிபரை வலியுறுத்தின. 2018 ஆம் ஆண்டு, வடக்கில், நுண் நிதி நிறுவனங்களுக்கு எதிரான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொலன்னறுவையின் ஹிங்குராங்கொட பிரதேசத்தில், 2021 ஆம் ஆண்டில் நுண் நிதியால் பாதிக்கப்பட்ட பெண்களின் கூட்டமைப்பால் தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில், சீரமைக்கப்படாத நுண் நிதி வழங்குநர்கள் அதிகரித்து வந்ததன் ஒரு பிரதிபலிப்பாக நுண் நிதிச் சட்டம் இல.6 இயற்றப்பட்டது. சூறையாடும் நடைமுறைகள், ஏழைகளின் பாதிப்புறக்கூடிய தன்மையைப் பயன்படுத்தி சுரண்டலில் ஈடுபடுதல் தொடர்பான பல முக்கிய விடயங்களை இந்தச் சட்டம் இனங்கண்டு, நிவர்த்தி செய்யத் தவறிவிட்ட அதேவேளை அதற்கு பதிலாக அது வெறுமனே தளர்வான ஒரு விதிமுறையாக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. நுண்நிதியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வட்டி வீத வரம்பினை நிர்ணயித்தமையானது ஓரளவு பயனுள்ள செயற்பாடாக அமைந்தது.
2024 ஜனவரி மாதத்தில், இடைக்கால அரசாங்கமானது 'நுண் நிதி மற்றும் கடன் அதிகார ஒழுங்குமுறை” சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. பெரிய நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை திறம்பட நிவர்த்தி செய்யவும் தவறிய இந்த சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தபட்டது. சட்டமூலத்தில் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும் எனவும் நீதிமன்றம் தீர்மானித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, நிதி அமைச்சானது இந்த சட்டமூலத்தை வாபஸ் பெற்றது.
அதைத் தொடர்ந்து, நுண்நிதி சட்டமூலத்தை மறு ஆய்வு செய்வதற்கும், அனைத்து மட்டங்களிலும் பொது ஆலோசனைகளை நடத்துவதற்கும் ஒன்பது பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இருப்பினும், பொது ஆலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை. மறுஆய்வு செயற்பாட்டில், இலங்கையில் நுண்நிதியால் பாதிக்கப்பட்ட ஒருவரும், சமூகக் கடன் வழங்குநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நபர்களும்; நுண்நிதியால் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த சுமையும்; இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் சட்டமூலத்தின் அடிப்படை கட்டமைப்பை எதிர்த்ததுடன் நெருக்கடி மற்றும் தேவையான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை தீர்வுகளின் தன்மையைப் புரிந்துகொள்ள ஒரு புதிய அணுகுமுறை எடுக்கப்படல் வேண்டும் எனவும் கோரினர்.
அந்தக் கோரிக்கைகளைப் புறக்கணித்து, ஆகஸ்ட் 2025 இல், NPP அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணைய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க கொள்கை ஒப்புதலை வழங்கியது. இந்த அறிக்கையை வெளியிடும் நேரத்தில், சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, இருப்பினும், மதிப்பாய்வுக்காக அத்தகைய சட்டமூலம் எதனையும் அரசாங்க அச்சகத்தின் வலைத்தளத்தில் பெறமுடியவில்லை.
உண்மையை அறியாத அரசாங்கத்தின் யதார்த்திற்கு மாறாக, உலக வங்கி கூட “நிதி சரிசெய்தல என்பது ஏழைகளை விகிதாசார ரீதியாக பாதித்துள்ளது, அவர்கள் வேலை மற்றும் வருமான இழப்புகளுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர். நெருக்கடிக்கு முந்தைய நிலைமைகளை விட உணவு விலைகள் இரு மடங்காக அதிகமாக உள்ளன, மேலும் உண்மையான ஊதியங்கள் இன்னும் மீளப்பறெவில்லை. இதற்கு பதிலளிக்கும் விதமாக... பல குடும்பங்கள் மனித மூலதனத்திற்கான செலவினங்களை, குறிப்பாக ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களைக் குறைத்துள்ளன" என ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் வீட்டுக் கடன், அதிகரித்து வரும் பட்டினி மற்றும் அரசாங்கத்தின் நிதி சரிசெய்தல் ஆகியவற்றுக்கு இடையேயான காரணத்தை புறக்கணித்து, உலக வங்கியும் தொடர்ந்து தோல்வியுற்ற பரிந்துரைகளை வழங்கிவருகிறது.
எங்களது உடனடியான கோரிக்கைகள்
-
நியாயமானதும் அரச தலைமையிலுமான கடன் நிவாரணத் திட்டத்தைத் தொடங்கி, வரவிருக்கும் அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் தேவையான ஒதுக்கீடுகளைச் சேர்க்கவும். வீட்டுக் கடனுக்கான கடன் நிவாரணம்/இரத்துச்செய்யும் திட்டம் இல்லாமல், எந்தவொரு சமூக நலத்திட்டமோ அல்லது மாற்றுத் திட்டமோ அர்த்தமற்றதாகிவிடும்.
-
தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகளின் அளவைக் கண்காணித்தல், அதிகரித்து வரும் குடும்ப வன்முறை, குடும்ப ஊட்டச்சத்து மட்டங்களில் ஏற்படும் தாக்கம் மற்றும் சொத்து இழப்பு உள்ளிட்ட நுண்நிதி மற்றும் வீட்டுக் கடனின் தாக்கம் குறித்த தேசிய தரவுகளைச் சேகரிக்கவும்.
-
மேலும் வெறுமனே கடன் திட்டங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, வறியவர்களின் சேமிப்பை மிகவும் அர்த்தமுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கு சமுர்த்தி வங்கியின் பங்கை உள்ளடக்கி சமுர்த்தித் திட்டத்தை மதிப்பாய்வு செய்யப்பட்டு வலுப்படுத்தப்படல் வேண்டும், அஸ்வசும திட்டத்தின் தோல்வியை அரசாங்கம் ஒப்புக்கொண்டு சரியாக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-
புதிய சட்டமானது நுண்நிதிக் கடனுடன் தொடர்புடைய கொள்ளையடிக்கும் மற்றும் சுரண்டல் நடைமுறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். விக்கிரமசிங்க - ராஜபக்சேவினால் முன்மொழியப்பட்ட சட்டமூலங்கள் அத்தகைய நடைமுறைகளைத் தடை செய்வது குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. வட்டிவீத வரம்புகள், நுண்நிதி நிறுவனங்களின் அணுகல் மற்றும் செயற்பாடுகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வலுவான நுகர்வோர் பாதுகாப்பு நடைமுறைகள் என்பன வன்முறை மற்றும் சுரண்டலைக் கட்டுப்படுதுவதாக அமைய வேண்டும்
-
நுண்நிதி கடன் தொடர்பான சம்பவங்களின் தகராறுகளைத் தீர்ப்பதில் மத்தியஸ்த சபைகள் அதிக சுமையைக் கொண்டுள்ளன. பிரச்சினையின் மிகப்பெரிய தன்மையையும், நெறிமுறை மற்றும் மனிதாபிமானக் கருத்துக்களையும் மையமாகக் கொண்டு, நியாயமாக பதிலளிக்கவும் மனிதாபிமான விருப்பங்களை வழங்கவும் மத்தியஸ்த சபைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
-
இலங்கையில் உள்ள பெரும்பாலான குடும்பங்களைப் பாதிக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் தாக்கத்தை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, மேலும் கடன் சுமையைத் தடுக்க உளளுர் பொருளாதார மீளுருவாக்கத்திற்கான ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும்.
கொள்கைகளை இயற்றும்போது அரசாங்கத்தின் அடிப்படை எதிர்பார்ப்பு, குறிப்பாக அந்த மாற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுடனும் பொதுமக்களுடனும் கலந்தாலோசிப்பதாகும்.
அவர்களின் அனுபவங்களை முழுமையாக அங்கீகரிக்காத, கொள்ளையடிக்கும் நடைமுறைகளை திறம்பட ஒழுங்குபடுத்தாத மற்றும் நுண்நிதி பெருக்கத்தைக் குறைக்காத ஒரு சட்டம், இலங்கையில் மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்க்கையில் பேரழிவான விளைவினையே ஏற்படுத்தும்.

கமலா வாசுகியின் கலை (2019)
பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் என்பது நாட்டின் பல்பாகங்களிலிருந்தும் பெண்ணிலைவாத பொருளியலாளர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய இலங்கையின் தற்போதைய பொருளதார நெருக்கடியுடன் அவர்கள் பணியாற்றும் சமுதாயங்களின் வாழ்க்கை யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைப் பரிந்துரைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றுக்குக் குரல் கொடுப்பதற்கும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டாகும். உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவு feministcollectiveforjustice@gmail.com
.png)