top of page

அனர்த்த முன்னாயத்தம், நியாயமான நிவாரணம் மற்றும் பொருளாதார நீதி: விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமூகங்களை முன்னுரிமைப்படுத்த பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம் கோரிக்கை

01.12.2025

சூறாவளிப் புயல் டிட்வா இலங்கையினை நெருங்கி, நிலைகொண்டு கரையைக் கடந்ததால், பல நாட்களாக இடைவிடாத மழையும் காற்றும் தீவை சேதமாக்கியுள்ளது. இதனை எழுதும் நேரத்தில், 355 பேர் உயிரிழந்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட 15000-25000 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 44,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

 

நிலச்சரிவுகளுக்குள்ளாகும் பகுதிகளில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு நலிவுற்ற தொழிலாளர் வர்க்க, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளான பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மக்கள் உதவிக்கு அழைக்க வழி எதுவுமின்றி பல மாவட்டங்களில் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 28ம் தேதி அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது. அயராது உழைக்கும் அவசரக்கால மீட்புப் பணியாளர்கள் ஆதரவும், தன்னார்வலர்கள் சமூக தலைமையிலான முயற்சிகளும் தொடர்கின்றன. எவ்வாராயினும், நிலவும் சூழ்நிலையால், மனித பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தகவல், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பு என்பன இல்லாமையினால், மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள சமூகங்கள் எந்த உதவியும் இல்லாமல் தவிக்கின்றன. 2004ல்  ஏற்பட்ட இந்து சமுத்திர சுனாமிக்குப் பிறகு இலங்கையில் அர்ப்பணிப்புள்ள அனர்த்த  முகாமைத்துவ முறைமைகள் நடைமுறையில் இருந்தாலும், இந்த முறைமைகள் போதுமான தயார் நிலையில் இல்லாதவையாக உள்ளன. பெரும்பாலும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கிய பின்னரே வெளியேற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன . அவற்றில் உட்கட்டமைப்பு பற்றிய தகவல்கள் வழங்காததால் மக்கள் நம்பிக்கையுடன் தற்கால தங்குமிடங்களுக்குச் செல்வதற்கான ஆதரவு வழங்கப்படவில்லை.

 

அனர்த்த  முகாமைத்துவ நிலையங்கள் மற்றும் வானிலை ஆய்வுத் திணைக்களங்கள் என்பன உள்ளிட்ட அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகள், பிரதானமாக தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில்கூட சிங்களத்தில் மட்டும் வெளியிடப்படுகின்றன. பாரதூரமான தேவையுள்ள நேரத்தின் போது கூட நிறுவனமயமாக்கப்பட்ட இனவாத நடைமுறைகள் ஊடுருவியுள்ளன. பயிற்சி பெற்ற மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்ட அனர்த்த காலப் பணியாளர்கள் இன்மையானது, இந்த நேரத்தில் இராணுவத்தில் தங்கியிருக்கும் கட்டாய நிலையை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் அனைத்து மீட்பு முயற்சிகளின் மனிதாபிமான நோக்கங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், எதிர்காலத்தில் இராணுவமற்ற அனர்த்தகால ஒட்டுமொத்த சேவைகளுக்கான அரசாங்க அமைப்புகளை நோக்கி நகர வேண்டியதன் அவசியத்தை நாங்கள் குறிப்புணர்த்துகிறோம்.

 

ஒதுக்கப்பட்டவர்களிலான தாக்கம்

 

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் இந்த அனர்த்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்த வருமானமுள்ள தொழிலாளர் வர்க்க வீடுசார் தொழில் செய்யும் மக்கள் இந்தச் சுமையைச் சுமக்கின்றனர். மீன்பிடியை நம்பியுள்ளவர் மீன்பிடிக்கச் செல்ல முடியாதுள்ளது: உணவு தயாரித்தல், கூடை பின்னுதல், வாசனைத் திரவியங்களை பொதி செய்தல், தையல் போன்ற வீடுசார் வாழ்வாதாரங்களைக் கொண்டவர்கள், போக்குவரத்து மற்றும் சந்தைகளுக்கான அணுகல் என்பவற்றிலுள்ள சீர்குலைவுகளினால் சம்பாதிக்க முடியாதுள்ளது. விவசாயத்தை நம்பியிருப்பவர்கள் தங்கள் முழுப் பயிரையும் இழந்துள்ளனர்.

 

சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். தொழிற்சாலைக் கழிவுநீர் கால்வாய்களைச் சுற்றி வசிக்கும் மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்கள் மோசமடைந்து வரும் நீர், சுகாதாரம் மற்றும் கடுமையான சுகாதார அபாயங்களுக்கு ஆளாகின்றனர். இந்த மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் கூட,  தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

 

தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளையும், அன்புக்குரியவர்களையும் இழந்து, தப்பிக்க எந்த வழியுமின்றி அடுத்தடுத்து ஏற்படும் நிலச்சரிவுகளுடனான போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். பெண் தொழிலாளர்கள், குறிப்பாக வீட்டு வேலை தொழிலாளர்கள், வேலைக்குச் செல்வதற்கும், அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட அதிகரித்துள்ள பராமரிப்புப் பணிகளுக்கும் இடையே சாத்தியமற்ற தெரிவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 

முழுப் பருவத்தினதும் விளைபொருட்களின் வருமானமும் இழக்கப்பட்டுள்ளதுடன் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மாற்றீடு செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதனால் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர் வர்க்க வீட்டுத்துறையினர் மீதான தாக்கம் குறுகிய காலமானது அல்ல.

ஏழை மற்றும் தொழிலாளர் வர்க்க சமூகங்களுடன், ஏனைய விளிம்புநிலைக் குழுக்களும் முற்றிலும் மறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் அல்லது பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஓர்பாலின ஈர்ப்புடைய மற்றும் திருநர் சமூகத்தவர் அனர்த்த காலங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.  தங்குமிடம் மற்றும் வெளியேறுவதற்கான அணுகலானது சவாலானது என்பதுடன் அவர்களது பால்நிலை மற்றும் பெயர்களை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணங்கள் இல்லாதது உட்பட்ட பல காரணங்களால்  சாத்தியமற்றதாக உள்ளது. அத்தகைய தடைகளுடன், குறிப்பாக நெருக்கடிகளின் போது பற்பல மக்கள், வழங்கப்படும் குறைந்த அளவிலான ஆதரவிற்கு போராடும் போது சமூக களங்கத்தினால், இந்தக் குழுவை மிகவும் அடி மட்டத்தில் வைக்கிறது.

 

செயற்கைக் கால்கள் கொண்டவர்கள், சக்கர நாற்காலிகளில் உள்ளவர்கள், பார்வையற்றவர்கள் அல்லது காது கேளாதவர்கள் ஆகியோரை வெள்ள நீர், நிலச்சரிவுகள் மற்றும் சூறாவளிக் காற்று என்பவற்றின் போது எந்தவித விழிப்புணர்வோ, கூருணர்வோ  அல்லது ஒழுங்குபடுத்தல் ஆதரவோ இல்லாமல், புகலிடங்களுக்குச் செல்லுமாறு அரசு அறிவிப்புகள், மக்களைக் கேட்கும்போது, மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பெண்கள், சிக்கித் தவிக்கின்றனர். எந்த தங்குமிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகள் - மலசலகூடங்கள் மற்றும் பிற அணுகல் வசதிகள் இல்லை. மாற்றுத்திறனாளிகள் தற்காலிக தங்குமிடங்களை அடைய முடிந்தாலும், நிவாரணப் பொதிகளுக்காக போட்டி போட முடியாது என்பதை கடந்த கால அனுபவத்திலிருந்து நாம் அறிவோம்.

 

அனர்த்தத்திற்கு பின்னரான சூழல்களில், வீட்டு மற்றும் பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் அதிகரித்து வருகின்றன. தற்போதுள்ள அவசர இலக்கங்கள் அரசால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதிகரித்த தேவையைச் சமாளிக்க அவை போதுமானதாக இல்லை. அவசரகால ஆதரவை அணுக முயன்ற பெண்கள்

பதிலளிப்புக் கட்டமைப்புகளின் தயார்நிலையில் இல்லாத தன்மையினைக் காட்டி திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

குறைந்தளவிலான நிரந்தர கட்டமைப்புகளைக் கொண்டிருப்பதனால் ஏற்படும் துயரங்களை கையாளல், உணவைப் பெறுதல், வெளியேற்றத்திற்கு தயாராகுதல், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் இளையவர்களைப் பராமரித்தல், அயல் வீட்டாருக்கும் கூட்டுக் குடும்பத்தினருக்கும் ஆதரவை வழங்குதல், தனிப்பட்ட உடமைகளைப் பாதுகாத்தல் என்பதுடன் அவர்களின் சொந்த மற்றும் பிறரின் அச்சங்கள் மற்றும் கரிசனைகளுக்கு இடமளித்தல் - போன்ற வீட்டுத்துறையின் தயார்படுத்தல் சுமையினை  பெண்கள் பாரிய அளவில் சுமக்கிறார்கள். எனினும், அவசரகால சமூக உளவியல் ஆதரவு அரிதாகவே உள்ளதுடன் சமாளிக்கும் மற்றும் தாங்குதிறன் கொண்ட பொறிமுறைகளை உருவாக்குவதில் பங்கேற்பதற்கு சமூகங்கள் உள்வாங்கப்படவில்லை.

 

ஏழைகளை விளிம்புநிலைக்குத் தள்ளும் பொருளாதார கட்டமைப்பால் காலநிலை நெருக்கடிஅவர்களை மேலும் பாதிக்கின்றது. பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கான நீண்டகால பாதுகாப்பு வலைகளை நிறுவுவதிலான தோல்வி என்பது இதுபோன்ற நேரங்களில் தெளிவாகத் தெரிகிறது. ஒரு வருடத்திற்குள், மூன்று காலநிலை அழிவுகளில் இருந்து நாம் தப்பிவாழ்கிறோம். கடந்த ஆண்டு நவம்பரில் வெப்பமண்டல புயல் பெங்கல், இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பரில் மோந்தா மற்றும் தித்வா சூறாவளிகள். நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலைகள், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நகரங்களின் தாழ்நிலையிலுள்ள புறநகர்ப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகள்/கால்வாய்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் பலவீனமான, திறந்த கட்டமைப்புகளில் வாழ வேண்டிய கட்டாயம் என்பன பெரும்பாலும் வறுமை மற்றும் நிலவுரிமையின்மையின் விளைவுகளாகும்.

 

வீட்டுவசதி சமத்துவமின்மையானது சமூக - வரலாற்றுரீதியானது என்பதுடன் கட்டமைப்புரீதியானதுமாகும். வாழ்வாதாரம், போக்குவரத்து மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகளுக்கான அணுகல், வாழ்வாதார்ம் சார் எற்றத்தாழ்வு மற்றும் சமூக் களங்கம் ஆகியவர்றை ஒன்றினைத்து பார்த்தால், மக்களின் பாதிப்புகள் கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்தவை என்பது தெளிவாகிறது.

கொள்கைசார் முன்னுரிமைகள்

 

இந்தச் சூழமைவில், 2026 வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலிக்கும் NPP அரசாங்கத்தின் கொள்கைகள் மீண்டும் சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க தவறியுள்ளதையிட்டு நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். சமூகப் பாதுகாப்பிலிருந்து மக்களைத் துண்டிப்பது அல்லது அமைச்சர் சுனில் ஹந்துனெட்டி செய்தது போல், பணப் பரிமாற்றங்களை பிச்சை எடுப்பதாக விவரிப்பது, கொள்கை வகுப்பாளர்களுக்கும் மக்களின் தேவைகளுக்கும் இடையிலான தொடர்பின்மையினைக் காட்டுகிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வெறுமனே வறுமை ஒழிப்பு மட்டுமல்ல. இது அனைத்து குடிமக்களுக்கும் ஒரு பாதுகாப்பு வலையாகும். உலகளாவிய சமூகப் பாதுகாப்பு என்பது காலநிலை அனர்த்தங்களின் தாக்கத்தினை ஓரளவிற்குத் தணித்திருக்கக்கூடிய இதுபோன்ற காலங்களில் இது உலகளாவியதாக இருக்க வேண்டிய அவசியம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

உலகளாவிய சமூகப் பாதுகாப்பு என்பது அனர்த்தங்களுக்கான தயார்நிலை மற்றும் அனர்த்தத்திற்கு பின்னரான பொருளாதார மற்றும் சமூகத்தின் தாங்குதிறன் என்பவற்றினை இன்றியமையாத அங்கமாக  கருதப்படல் வேண்டும். இந்தத் தாங்குதிறனானது இந்த முறைமைகளினூடாக அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான ஒரு நிலையான மற்றும் நம்பகமான இணைப்பாக கட்டப்படுகிறது. சமூகப் பாதுகாப்பு என்பது சுகாதார வசதிகள், உணவு மற்றும் போசாக்குத் திட்டங்கள், காலநிலைக்கு ஏற்ற வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்கான நிதியுதவிக்கான இயல்பு போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை அணுகுவதை உறுதி செய்கிறது.

 

கடந்த சில நாட்களில் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவிலும் பேரழிவு தரும் இயற்கை அனர்த்தங்களை நாம் கண்டிருக்கிறோம். உலகளாவிய கடன் சுமை காலநிலை நெருக்கடியை பிரதிபலிப்பதுடன் இலங்கை போன்ற வறிய நாடுகளின் பலவீனமான தோள்களில் பெரியளவில் உள்ளது. 50%திற்கு மேற்பட்ட குடும்பங்கள் கடனில் மூழ்கியுள்ள நிலையில், மக்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளில் இருந்து அரிதாக தப்பிப்பிழைத்து வாழ்கின்றனர்.

 

அரசாங்கம் இந்த யதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன் பொருளாதார முன்னுரிமைகள், அதன் தொடர்ச்சியான மனிதாபிமானமற்ற சிக்கனக் கொள்கைகள் மற்றும் கடுமையான கடன் திருப்பிச் செலுத்தும் உறுதிப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 

காலநிலை அனர்த்தங்களின் தாக்கங்களுக்கும் அதிகரித்து வரும் கடன் சுமைகளுக்கும் இடையிலான தொடர்ப்பு செம்மையான முறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. NPP அரசாங்கம் வரும் மாதங்களில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற கடன் வழங்குநர்களால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த பேரழிவிலிருந்து நாடு மீள போராடும் போது, அரசாங்கம் அதன் மக்களின் பக்கம் இருக்க வேண்டும், அதன் கடன் வழங்குநர்களின் பக்கம்  அல்ல.

 

அவசர கோரிக்கைகள்:

 

● மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டவர்கள் பற்றிய கூருணர்வு  கொண்டதாக இருக்க வேண்டும். கட்டடங்கள், குறிப்பாக தற்காலிக தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள், சுத்தமான நீர், சுத்தமான மலசலகூடங்கள், சமையல் மற்றும் உணவுண்ணும் வசதிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான பாதுகாப்பான இடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் உள்ளிட்ட ஏராளமான மக்களுக்கு ஆதரிக்கும் வகையில் இருத்தல் வேண்டும்.

 

● அனர்த்தங்கள் மற்றும் நிவாரணம் தொடர்பான அனைத்து அரச தொடர்பாடல்களும்  அனைத்து மொழிகளிலும் இருக்க வேண்டும்.

 

● அனர்த்தப் பதிலளிப்பு மற்றும் நிவாரணப் பணிகளின் முடிவெடுக்கும் செயல்முறைகளில், சமூகங்களை குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை ஈடுபடுத்தப்பட வேண்டும். அனைத்து அரச மற்றும் சமூக அளவிலான முடிவெடுக்கும் அமைப்புகளிலும் குறைந்தது 50% பெண் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

 

● திரும்புதல், மீள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான திட்டங்கள் பெண்கள், முறைசாரா தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீதான தாக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • ஓர்பாலின ஈர்ப்புடையோர் மற்றும் திருநர் சமூகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூக ரீதியாக புறந்தள்ளப்படும் அல்லது புறக்கணிக்கப்படும் சமூகங்கள் ஆகியோருக்கு சிறப்பான ஆதரவு தொடர்புகளை வழங்கவும். இந்த ஆதரவு தொடர்புகளில் இந்த சமூகங்களின் தேவைகளுக்கு கூருணர்வு  கொண்ட அலுவலர்கள் இருக்க வேண்டும்.

  • பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு பதிலளிக்க சிறந்த செயற்றிறனுள்ள ஆதரவு மையங்களை அவசரமாக செயல்படுத்த வேண்டும்.

  • பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பரிந்துரைப்போர், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் முதலுதவி அளிப்பவர்கள் தலைமையில் நிரந்தரமான கிராம அலுவலர் மட்ட அனர்த்த முன்னாயத்த குழுக்களை நிறுவுதல்.

  • மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் செயலிழந்தாலும் கூட சரியான நேரத்திலான எச்சரிக்கைகளை உறுதி செய்வதற்காக, சூரிய சக்தியில் இயங்கும் ஒலி எழுப்பான்கள் (சைரன்கள்) மற்றும் மெகாபோன் அறிவிப்பு முறைமைகள் சமூகங்களில் பொருத்தப்பட வேண்டும்.

  • அனர்த்த முகாமைத்துவ அமைச்சு போன்ற ஏற்கனவேயுள்ள பொறிமுறைகள், அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது ஆயுதப் படைகளால் தங்கள் வகிபங்கை பதிலீடு செய்வதற்கு பதிலாக, தங்கள் கடப்பாட்டினை நிறைவேற்ற வலுப்படுத்தப்படல் வேண்டும்.

  • இலங்கை முழுவதும் சூறாவளிகளாலும் ஏனைய இயற்கை அனர்த்தங்களாலும் ஏற்படுத்தப்படும் சேதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், இலங்கையின் அனர்த்த முன்னாயத்த நிலையில் தீவிர கவனம் செலுத்தப்படல் வேண்டும். காலநிலை மாற்றத்தைத் தணித்தல், உணவுப் பாதுகாப்பு, தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கடன்கள் அல்லாத வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் மற்றும் அனர்த்தங்களுக்கான உள்கட்டமைப்பு ஏற்பாடுகள்  ஆகியவை தொடங்கப்படல் வேண்டும்.

  • மலையகத்திலுள்ள பல குடும்பங்கள் நிலையற்ற சரிவுகளில் வாழ்கின்றன. திட்டமிடல் மற்றும் அமுல்படுத்தலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அர்த்தமுள்ள பங்கேற்புடன் பாதுகாப்பான வீட்டுவசதி, நில உரிமை மற்றும் நிலையான வாழ்வாதாரத்திற்கான அணுகலை உறுதி செய்யும் ஒரு நீண்டகால திட்டம் தேவை.

  • அனர்த்த காலங்களில் செயற்றிறனாகவும் அர்த்தமுள்ளதாகவும் நிவாரணம் வழங்கக்கூடிய சர்வஜன சமூக பாதுகாப்பு திட்டங்களை ஆரம்பிக்கவும்.

  • காலநிலை தாக்கத்திற்கான மேம்பாடு, முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மதிப்பாய்வு செய்து, அனர்த்த காலங்களில் நிலம், வளங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் ஆபத்தில் அத்தகைய திட்டங்களின் பங்களிப்பை மதிப்பிடவும்.

  • இந்த நெருக்கடி சூழலில் கடன் திருப்பிச் செலுத்துதலை ரத்து செய்யவும், சிக்கனக் கொள்கைகளை மாற்றியமைக்கவும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் அவசர பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும்.

​பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாதக் குழுமம் என்பது நாட்டின் பல்பாகங்களிலிருந்தும் பெண்ணிலைவாத பொருளியலாளர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய இலங்கையின் தற்போதைய பொருளதார நெருக்கடியுடன் அவர்கள் பணியாற்றும் சமுதாயங்களின் வாழ்க்கை யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கைப் பரிந்துரைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் அவற்றுக்குக் குரல் கொடுப்பதற்கும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டாகும்.  உங்கள் கருத்துக்களைத் தயவுசெய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவு​ feministcollectiveforjustice@gmail.com

©2022 by Feminist Collective for Economic Justice. Proudly created with Wix.com

bottom of page